About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Friday, July 19, 2013

சாய்பாபா - 11வது நாள் அதிசயம்

மயிலாப்பூரில் வசித்து வருகிறார் ஒரு பெண்மணி. நீண்ட காலமாக தனது கையைத் தூக்க முடியாமல் அவதிபட்டுக் கொண்டிருந்தார். பார்க்காத மருத்துவம் இல்லை. பார்க்காத மருத்துவரில்லை. எல்லாவித சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. கைவலி அதிகமானதே தவிர. குறைந்ததாகத் தெரியவில்லை. ஆபரேஷன் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. 

மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் குடிவந்தார். பாபா கோவிலுக்குத் தினமும் சென்றார். பாபாவிடம் மனமுருக வேண்டினார். பாபாவின் திருவுருவச் சிலைக்கு (பிரபை) பின்புறம் சுவற்றில் பாபாவின் திருவுருவப் படம் வரையப்பட்டிருக்கும். படத்தின் காலடிகளை அனைத்து பக்தர்களும் தொட்டு வணங்கிச் செல்வதைக் கண்ட பெண்மணியும் தொட்டு வணங்க முயன்றார். முடியவில்லை. பாபாவின் பாதங்களைத் தொட்டு நம்மால் வணங்க முடியவில்லையே என்று கண்கலங்கினார். 

கைகளைச் சுவற்றில் வைத்து, ‘பாபா, உன் பாதங்களை என்னால் தொட்டு வணங்கமுடியவில்லை. என்னால் கையைத் தூக்க முடியவில்லை. கைவலி அதிகமாக உள்ளது. இந்த வலியெல்லாம் நீங்கி நான் மேலே உள்ள உன் பாதங்களை தொட்டு வணங்க நீதான் அருள் செய்யவேண்டும்’ என்று பாபாவிடம் மனமுருக வேண்டினார். பாபாவை தினம் தினம் வேண்டினார். பாபாவின் பாதங்களைத் தொட முயன்றார். 11வது நாள் அந்த ஆச்சரியம் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல கைகள் மேலே உயர்ந்து உயர்ந்து இன்று பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தினசரி காலையில் மயிலை சாய்பாபா கோவிலுக்குச் சென்று பாபாவை வணங்கி வருகிறார்.அவரைப் போல பக்தர்களும் பாபாவின் ஆசியைப் பெறுங்கள்.

Saturday, September 29, 2012

தேசிய விருது பெற்ற மயிலை ஆசிரியர்



முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5ம் தேதி புதுதில்லியில் இந்திய குடியμசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சர் சிவசாமி கலாலயா உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. பாண்டியனுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட் 22 சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். ஒரு கல்லூரியில் கணித உதவிப் பேμõசிரியμõகப் பணித் தொடங்கிய பாண்டியன், ஆசிரியர் பணிக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மந்தவெளி யிலுள்ள சர். சிவசாமி கலாலயா பள்ளியில் முதல்வμõக பணியாற்றி வருகிறார். 2009.10ல் தமிழக நல் ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். செப். 10ம் தேதி ஆர்.கே. சுவாமி அரங்கத்தில் தேசிய விருது பெற்ற இவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தியது பள்ளி நிர்வாகம். கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டு ஆசிரியர் ஜி. பாண்டியனைப் பாராட்டி, வாழ்த்தினார்கள். கல்வித் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர் தேசிய அளவிலான NCERTயின் வணிகக் கணிதத்தின் பாடத் திட்டக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

சண்முகானந்தாவின் 45வது ஆண்டு விழா


கலைமாமணி தஞ்சை ஏ. ஹேமநாத், நாட்டிய கலைமணி மல்லிகா ஹேமநாத் நடத்தும் சண்முகானந்தா பரத நாட்டியப் பள்ளியின் 45வது ஆண்டு விழா ஆர்.கே. சுவாமி அரங்கத்தில் செப். 16ம் தேதி வெகுசிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக சலங்கை அணி விழாவில், குமாரி. பவித்ரா, குமாரி சுசித்ரா, குமாரி ஹர்ஷா, குமாரி ரிஷிகா ஆகியோர் மிக நேர்த்தியாக இறைவணக்கம், அலாரிப்பு, சப்தம் ஆகியவற்றுக்கு மிக அழகாக ஆடினார்கள்.
அதன்பின் மூத்த மாணவிகள் அனைவரும் சேர்ந்து பாபநாசம் சிவன் எழுதிய ‘நீ இந்த மாயம் செய்தால்... நியாயமா! தயாநிதியே...’ என்ற பாடலுக்கு மிக நேர்த்தியாக, கால், கை அசைவுகள், முகத்தில் ஏக்கத்தைக் கொணர்ந்து, கண் அசைவுகளினாலும் அற்புதமாக நடனமாடினார். அனைவரும், கிருஷ்ணனைப் பார்த்து ‘உன்னையே நாங்கள் நினைத்துக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கிறோம்! தாமதம் செய்யாது எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்ற அடிகளுக்கு குதித்து, குதித்து ஆடியும், அங்குமிங்கும் ஓடியும் கண்ணன் வருகிறானா! என்று நெற்றியில் ஒரு கையை வைத்து பார்ப்பது-போல், விழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். பிறகு வர்ணத்தின் சரணத்தில் அனைத்து நடனமணிகளும் கிருஷ்ணன் ஆயர்பாடியில் செய்த அனைத்து விஷமங்களையும் ஒன்றுவிடாமல் செய்து காட்டினர்.

அதன்பின் வந்த பாம்பு நடனம் ஆஹா... அற்புதம்... வந்திருந்த அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சுழன்று சுழன்று இரண்டு கைகளையும் பாம்புபோல் இரு கைகளினால், கால்களை மடக்கிப் பிடித்து கொண்டு நகர்ந்து நகர்ந்து ஆடி மாணவிகளுக்கு ஒரு சபாஷ்.

நிறைவாக தில்லானாவில் அனைத்து மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஆடியது வெகு சிறப்பாக இருந்தது. இந்த அற்புதமான நடனத்திற்கு உற்றதுணையாக குரு ஹேமநாத்தின் ஜதிகோர்வைகள்  மிக அழகாக, அடுக்கடுக்காக அள்ளி வீசினார். பாடகி காவேரி நல்ல முறையில் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினார். பக்க வாத்தியங்களான வயலினும் மிருதங்கமும் அற்புதமான முறையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவில் இரு மலர்கள், கஸ்தூரி தொலைக்காட்சி தொடர் புகழ் சிவன் சீனிவாசன், துளசி, தங்கமான புருஷன் புகழ் ரம்யா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளையும், நடனமாடிய அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகளையும் வழங்கினார்கள்.

மேலும் விவரங்களுக்கு - கலைமாமணி தஞ்சை ஹேமநாத் 94441 66513 / 2644 0923

- ராகப்ரியன்
புகைப்படங்கள் : ராஜ்பஞ்சு

Thursday, September 13, 2012

ஆனந்த நடனமாடினார் ஹரிணி


கான முகுந்தப்ரியா சபாவின் சார்பில் 07.09.2012 அன்று டி.என். ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் ஹரிணி லக்ஷ்மணனின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் ‘அங்கையற் கண்ணி, ஆனந்தம் கொண்டாளே! வெற்றி வாகை சூடினாளே!’ என்ற லால்குடி ஜெய-ராமனின் வர்ணத்திற்கு நடனமணி, முகத்தில் ஆனந்தத்தை கொணர்ந்து, கையில் போரிடும் ஆயுதத்தை எடுத்ச் சென்று மேடையில் அங்கும் இங்கும் ஆடி போர் செய்த காட்சியை வெகு தத்ரூபமாக செய்து காட்டினார். குரு ஜெயந்தி சுப்ரமணியம் அவர்களின் அட்டகாசமான ஜதிக் கோர்வைகளுக்கு, அவர் தன் கை அசைவுகளினாலும், கால் அசைவுகளினாலும், கண்களில் பெருமிதம் பொங்க, சிரித்த முகத்துடன், தாவித்தாவி, அனுபவித்து ஆடினார்.



‘காலனை உதைத்தார்’ என்ற வரிக்கு, ஹரிணி தன்னை மார்கண்டேயனாக பாவித்து, தான் இனி உயிர் பிழைப்பது அரிது என்று அறிந்து, சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து, பூஜை செய்கின்ற சமயத்தில், காலனாகிய எமன், உயிரை எடுக்கும்படியான பாசக்கயிறை அவன் போட்டு இழுக்க முற்பட்டபோது, தனக்கு சிவபெருமானைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று, அவனை இறுகத் தழுவி இருக்க, தன் பக்கத்தினை எமனிடமிருந்த காப்பதற்காக, தன் வலது காலால் உதைத்தார். ரொம்ப நேர்த்தியாக, தன் திறமையைக் காட்டி ஆடினாள்.

‘பிட்டுக்கு மண் சுமந்து... பிரம்படி பட்டான்’ - என்ற வரிக்கு உண்ட மயக்கத்-தில் சற்றே கண் அசர, அதைப் பார்த்த முதலாளி பிரம்பால் அடிக்க, அந்தக் காட்சியைக் கண்டு தேவி கைக்கொட்டி சிரித்ததும், வாய் பொத்தி நகைத்தாள். இந்தக் காட்சியினை  ஹரிணி மண் கூடையை, தலைக்கு மேல் சுமந்து வெகு அழகாக, மென்நடையோடு, புட்டின் ருசிக்கு அடிமையாகி, ருசித்து சாப்பிட்டும், சிறிது களைப்புற கண்களை மூடிய, அனைத்துச் செயல்களையும் மிக நளினமாகவும், நேர்த்தியாகவும் செய்து காட்டினார்.

இந்தப் பாடலின் சரணத்தில் ‘தேவியை பணிந்து அவள் அருள் பெறுவோமே! மகாகாளி ரூபம் எடுத்து மகிஷாசூரனை மாய்த்த காட்சியையும், மிகத் துடிப்புடன், அங்குமிங்கும் குதித்து, முகத்தில் கோபத்தையும் வீரத்தையும் ஒன்று சேர்த்து, கண்கள் இரத்த பழமாக சிவக்க, கையில் பற்றியிருந்த சூலத்தினால் அவனை மாய்த்த காட்சி கண்ணை விட்டு அகலாத நடனம். மகிஷாசூரனை மாய்த்தபின், தேவியாக தன்னை பாவித்து நடனம் செய்த ஹரிணி ‘சாந்த ஸ்வரூபியாக காட்சி அளித்தது, தேவி மீனாட்சியே நேரில் தோன்றியதுபோல் உள்ளுணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.

அடுத்து மதுரா நகரிலே.... கண்ணா... என்ற பாடலுக்கு கோபிகை எவ்வளவு அன்பும், காதலும் கிருஷ்ணன்பால் ஈர்க்கப்பட்டது என்பதை, நாட்டியமணி, மிக துல்லியமாக சிருங்கார ரஸத்தைப் பக்தியுடன் கூடி ஆடி அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார் ஹரிணி.

நிறைவாக, தில்லானாவிற்கு சற்று கூடுதல் வேகத்துடன், கழுத்து அசைவுகளாலும், முகத்தில் அனைத்து பாவங்களையும் கொணர்ந்து, பல்வேறு கோணங்-களில் நின்று ஆடி, தான் நடனம் செய்யும் போதே, மிருதங்கம், வாசிப்பது போலவும், தாளம் போடுவதும், கை தட்டுவதும், சலங்கை ஒலி எடுப்பதும் ஆகிய பல வண்ண ஜாலங்களை செய்து நடனம் செய்து அவையிலிருந்தவர்-களின் பாராட்டுதலை அள்ளிக் கொண்டார்.
இவருக்கு உறு-துணையாக குரு ஜெயந்தி சுப்ரமணியத்தின் நடன அமைப்பு, ஜதிகள் மிக அற்புதமாக இருந்தது. நெல்லை கண்ணன் மிரு-தங்கம் வெகுஅற்புதமாக நடனமணிக்கு தகுந்தவாறு  ஜதிகளுக்கு மிக நேர்த்தியாக வாசித்து யாவரையும் மகிழச் செய்தார். நந்தினி சர்மா ஆனந்த் தன்னுடைய இனிமையான குரலில் வெகுஜோராக பாடி மகிழ்வித்தார். வயலின் கலையரசன் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அற்புதமாக வாசித்தார்.

- ராகப்ரியன்

Saturday, September 8, 2012

சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்

சென்னையின் பாரம்பரிய அடையாளங்கள் ஒன்றாகத் திகழும் சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் சேவையில் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டதல்ல. அது 262 வருட பரிணாம மாற்றங்களுக்குப் பிறகே உயர்நீதிமன்றமாக உருவெடுத்தது. 1600ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தொடர்பான சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றமாக ஆங்கில அரசால் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப் பட்டது. அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் 1640ல் சவுல்ட்ரி கோர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதே சிவில், கிரிமனல் வகைக் குற்றங்களை விசாரிக்கத் தொடங்கியது. 

மேலும் சில மாற்றங்களுடன் சவுல்ட்ரி கோர்ட், 1688ல் மேயர் கோர்ட் ஆக மாற்றப்பட்டு சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1798ல் இது மெட்ராஸ் கோர்ட் ஆஃப் ரெக்கார்டர் என்று மாற்றப்பட்டு, அதன் முதல் ரெக்கார்டராக தாமஸ் ஸ்டிரேன்ஜ் நியமிக்கப்பட்டார். விரைவில் 1801ல் அது மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் ஆக மாறியது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில்தான் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு 1862ஆம் ஆண்டுவரை மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. 

1862ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஐகோர்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறுதான் சென்னை உயர்நீதி மன்றம் உருவாகியது. 1888ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் 1892ல் நிறைவுற்றது. தற்போதுள்ள கட்ட வளாகத்தில் 1892 முதல் உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. 2004ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

சென்னை உயர்நீதிமன்றம் தனது நெடிய வரலாறில் பல முக்கியமான வழக்குகளையும் விசித்திரமான வழக்குகளையும் சந்தித்துள்ளது. அபாரமான வாதத்திறமை கொண்ட பல வழக்கறிஞர்களையும், நீதியின் செங்கோல் வழுவாமல் தீர்ப்பளிக்கும் ஞானம் கொண்ட பல நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. நாட்டையே கதிகலங்க வைத்த, பரபரப்பூட்டிய பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

நமது நீதிமன்றங்கள் தொடக்கத்தில் சிவில், கிரிமினல் வழக்குகளை மட்டுமே கவனித்து வந்தாலும், சுதந்தரத்துக்குப் பிறகு, நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அதைக் காக்கும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு வந்துவிட்டது. நாட்டின் முதல் இரண்டு அடிப்படைத் தூண்களான அரசும் நிர்வாகமும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுவரும் இக்காலத்தில், அவற்றைக் கண்டிக்கும் பொறுப்பையும், முறையாகச் செயல்பட வைக்கும் பொறுப்பையும் நீதிமன்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் ஆபத்து நேராமல் காப்பதில் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகக் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. அதை நமது நீதிமன்றங்கள் செம்மையாகவே செய்துவருகின்றன. கிரிமினல் வழக்குகளில் மட்டுமல்லாமல் சமூக நல வழக்குகளில் பல அற்புதமான தீர்ப்புகளை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் பெருமைச் சேர்த்துள்ளது. 

நீதிமன்றங்கள் தமது அதிகார வரம்புக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு மக்கள் 
சேவையாற்றினாலும், போதுமான நிர்வாக வசதிகள், கட்டமைப்புகள் இல்லாதது, போதுமான நீதிபதிகள் இல்லாதது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளாதது எனப் பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்கள்.  

- மான்வேல்ஸ்

Thursday, August 30, 2012

குச்சுபுடி நாட்டியம்



கானமுகுந்த ப்ரியா சார்பில் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் நடந்த ‘குச்சுப்புடி’ நடனம் மிகவும் சிலாக்கியமானது. முதலில் கடவுள் அஞ்சலியில், விமலா ஈஸ்வரன், சந்தியா தினேஷ் இருவரும் மிக அற்புதமாக நடனம் செய்தனர். 

பின்னர் சந்தியா தினேஷ் மட்டும் ஸ்ரீமத் நாராயணீயத்தில் வரும் ஒரு ஸ்லோகத் திற்கு ‘அக்ரே பஸ்யாமி தேஜோ நிபிடதர’ தன் கண் மூலம் காயாம் பூக்குவைப் போல் மிகவும் அழகியதொரு ஒளிப்பிழம்பை யும், அழகுமிக்க ஒரு திவ்ய ஸ்வபேத்தை யும், நாரதர் முதலிய ரிஷிகளாலும், சுந்தர மண்டலங் களாலும் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்’ - நடனமணி தனது இரு கைகளையும் ஒன்றுசேர்த்து கண்களில் ஓர் அதிசயத்தை பார்க்கிற மாதிரியும், அங்க அசைவுகளும், அடவுகளும், நேர்த்தியான முக பாவங்களுடன், வெகு நளினமாகவும் வெவ்வேறு கோணங்களில் நின்று ஆடினாள்.

அடுத்து விமலா ஈஸ்வரன் பைரவி ராகத்தில் அமைந்த ‘சத்யபாமா... பாவனே!’ என்ற சாஹித்தியத்திற்கு அழகு நடை நடந்து, ஒரு பக்கமா சாய்ந்தும், தன்னுடைய நீண்ட குழலையும் முன்புறம் விட்டு, கண்களில் ஒளிமின்ன, முகத்தில் அனைத்து பாவங்களையும் கொணர்ந்து, தான் அழகிலும், கண் வீச்சிலும், ருக்மணியைவிட தன்னைத்தான் கண்ணன் விரும்புவான், விரும்பிக் கொண்டு இருக்கிறான் என்று கண்ணன் மீது தீராத ஆசையை வெளிப்படுத்தினாள். இவருடைய கால் அசைவுகள், கை அசைவுகள், கண்ணின் தீட்சண்யம், ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் வெகு நேர்த்தியாக நடனம் செய்தார்.

இறுதியாக, தில்லானாவில் இருவரும் வெகு சுறுசுறுப்பாகவும், ஜதிகளுக்கு தகுந்த மாதிரி தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, அந்த அரங்கையே சுற்றி சுற்றி, வலம் வந்து, வெகு நேர்த்தி யாகவும் அமர்க்களமாகவும், குச்சுபுடி நடனம் செய்து ரசிகர்களை சொக்க வைத்தனர். குரு வேதாந்தம் ராமு அள்ளி வீசிய அழகான ஜதிக் கோர்வைகள்  மிகவும் அருமையாக இருந்தது. பாடகர் கோமதி நாயகம் வெகு அழகாகப் பாடி எல்லோருடைய மனதில் இடம் பிடித்தார். மிருதங்கம் பனிக்குமார் வயலின் சோழியபுரம் சங்கர்,புல்லாங்குழல் சங்கர நாராயணன் ஆகியோரும் தங்களுடைய பங்கினைச் சிறப்பாக செய்தனர்.

வேதாந்தம் ராமுவின் சிஷ்யைகள் இருவரும் வந்திருந்த ரசிகர்கள் மனம் குளிர நடன மாடினார் கள்.
-  ராகப்ரியன்