About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Saturday, September 29, 2012

சண்முகானந்தாவின் 45வது ஆண்டு விழா


கலைமாமணி தஞ்சை ஏ. ஹேமநாத், நாட்டிய கலைமணி மல்லிகா ஹேமநாத் நடத்தும் சண்முகானந்தா பரத நாட்டியப் பள்ளியின் 45வது ஆண்டு விழா ஆர்.கே. சுவாமி அரங்கத்தில் செப். 16ம் தேதி வெகுசிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக சலங்கை அணி விழாவில், குமாரி. பவித்ரா, குமாரி சுசித்ரா, குமாரி ஹர்ஷா, குமாரி ரிஷிகா ஆகியோர் மிக நேர்த்தியாக இறைவணக்கம், அலாரிப்பு, சப்தம் ஆகியவற்றுக்கு மிக அழகாக ஆடினார்கள்.
அதன்பின் மூத்த மாணவிகள் அனைவரும் சேர்ந்து பாபநாசம் சிவன் எழுதிய ‘நீ இந்த மாயம் செய்தால்... நியாயமா! தயாநிதியே...’ என்ற பாடலுக்கு மிக நேர்த்தியாக, கால், கை அசைவுகள், முகத்தில் ஏக்கத்தைக் கொணர்ந்து, கண் அசைவுகளினாலும் அற்புதமாக நடனமாடினார். அனைவரும், கிருஷ்ணனைப் பார்த்து ‘உன்னையே நாங்கள் நினைத்துக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கிறோம்! தாமதம் செய்யாது எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்ற அடிகளுக்கு குதித்து, குதித்து ஆடியும், அங்குமிங்கும் ஓடியும் கண்ணன் வருகிறானா! என்று நெற்றியில் ஒரு கையை வைத்து பார்ப்பது-போல், விழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். பிறகு வர்ணத்தின் சரணத்தில் அனைத்து நடனமணிகளும் கிருஷ்ணன் ஆயர்பாடியில் செய்த அனைத்து விஷமங்களையும் ஒன்றுவிடாமல் செய்து காட்டினர்.

அதன்பின் வந்த பாம்பு நடனம் ஆஹா... அற்புதம்... வந்திருந்த அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சுழன்று சுழன்று இரண்டு கைகளையும் பாம்புபோல் இரு கைகளினால், கால்களை மடக்கிப் பிடித்து கொண்டு நகர்ந்து நகர்ந்து ஆடி மாணவிகளுக்கு ஒரு சபாஷ்.

நிறைவாக தில்லானாவில் அனைத்து மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஆடியது வெகு சிறப்பாக இருந்தது. இந்த அற்புதமான நடனத்திற்கு உற்றதுணையாக குரு ஹேமநாத்தின் ஜதிகோர்வைகள்  மிக அழகாக, அடுக்கடுக்காக அள்ளி வீசினார். பாடகி காவேரி நல்ல முறையில் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினார். பக்க வாத்தியங்களான வயலினும் மிருதங்கமும் அற்புதமான முறையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவில் இரு மலர்கள், கஸ்தூரி தொலைக்காட்சி தொடர் புகழ் சிவன் சீனிவாசன், துளசி, தங்கமான புருஷன் புகழ் ரம்யா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளையும், நடனமாடிய அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகளையும் வழங்கினார்கள்.

மேலும் விவரங்களுக்கு - கலைமாமணி தஞ்சை ஹேமநாத் 94441 66513 / 2644 0923

- ராகப்ரியன்
புகைப்படங்கள் : ராஜ்பஞ்சு

No comments:

Post a Comment