About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, September 13, 2012

ஆனந்த நடனமாடினார் ஹரிணி


கான முகுந்தப்ரியா சபாவின் சார்பில் 07.09.2012 அன்று டி.என். ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் ஹரிணி லக்ஷ்மணனின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் ‘அங்கையற் கண்ணி, ஆனந்தம் கொண்டாளே! வெற்றி வாகை சூடினாளே!’ என்ற லால்குடி ஜெய-ராமனின் வர்ணத்திற்கு நடனமணி, முகத்தில் ஆனந்தத்தை கொணர்ந்து, கையில் போரிடும் ஆயுதத்தை எடுத்ச் சென்று மேடையில் அங்கும் இங்கும் ஆடி போர் செய்த காட்சியை வெகு தத்ரூபமாக செய்து காட்டினார். குரு ஜெயந்தி சுப்ரமணியம் அவர்களின் அட்டகாசமான ஜதிக் கோர்வைகளுக்கு, அவர் தன் கை அசைவுகளினாலும், கால் அசைவுகளினாலும், கண்களில் பெருமிதம் பொங்க, சிரித்த முகத்துடன், தாவித்தாவி, அனுபவித்து ஆடினார்.



‘காலனை உதைத்தார்’ என்ற வரிக்கு, ஹரிணி தன்னை மார்கண்டேயனாக பாவித்து, தான் இனி உயிர் பிழைப்பது அரிது என்று அறிந்து, சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து, பூஜை செய்கின்ற சமயத்தில், காலனாகிய எமன், உயிரை எடுக்கும்படியான பாசக்கயிறை அவன் போட்டு இழுக்க முற்பட்டபோது, தனக்கு சிவபெருமானைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று, அவனை இறுகத் தழுவி இருக்க, தன் பக்கத்தினை எமனிடமிருந்த காப்பதற்காக, தன் வலது காலால் உதைத்தார். ரொம்ப நேர்த்தியாக, தன் திறமையைக் காட்டி ஆடினாள்.

‘பிட்டுக்கு மண் சுமந்து... பிரம்படி பட்டான்’ - என்ற வரிக்கு உண்ட மயக்கத்-தில் சற்றே கண் அசர, அதைப் பார்த்த முதலாளி பிரம்பால் அடிக்க, அந்தக் காட்சியைக் கண்டு தேவி கைக்கொட்டி சிரித்ததும், வாய் பொத்தி நகைத்தாள். இந்தக் காட்சியினை  ஹரிணி மண் கூடையை, தலைக்கு மேல் சுமந்து வெகு அழகாக, மென்நடையோடு, புட்டின் ருசிக்கு அடிமையாகி, ருசித்து சாப்பிட்டும், சிறிது களைப்புற கண்களை மூடிய, அனைத்துச் செயல்களையும் மிக நளினமாகவும், நேர்த்தியாகவும் செய்து காட்டினார்.

இந்தப் பாடலின் சரணத்தில் ‘தேவியை பணிந்து அவள் அருள் பெறுவோமே! மகாகாளி ரூபம் எடுத்து மகிஷாசூரனை மாய்த்த காட்சியையும், மிகத் துடிப்புடன், அங்குமிங்கும் குதித்து, முகத்தில் கோபத்தையும் வீரத்தையும் ஒன்று சேர்த்து, கண்கள் இரத்த பழமாக சிவக்க, கையில் பற்றியிருந்த சூலத்தினால் அவனை மாய்த்த காட்சி கண்ணை விட்டு அகலாத நடனம். மகிஷாசூரனை மாய்த்தபின், தேவியாக தன்னை பாவித்து நடனம் செய்த ஹரிணி ‘சாந்த ஸ்வரூபியாக காட்சி அளித்தது, தேவி மீனாட்சியே நேரில் தோன்றியதுபோல் உள்ளுணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.

அடுத்து மதுரா நகரிலே.... கண்ணா... என்ற பாடலுக்கு கோபிகை எவ்வளவு அன்பும், காதலும் கிருஷ்ணன்பால் ஈர்க்கப்பட்டது என்பதை, நாட்டியமணி, மிக துல்லியமாக சிருங்கார ரஸத்தைப் பக்தியுடன் கூடி ஆடி அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார் ஹரிணி.

நிறைவாக, தில்லானாவிற்கு சற்று கூடுதல் வேகத்துடன், கழுத்து அசைவுகளாலும், முகத்தில் அனைத்து பாவங்களையும் கொணர்ந்து, பல்வேறு கோணங்-களில் நின்று ஆடி, தான் நடனம் செய்யும் போதே, மிருதங்கம், வாசிப்பது போலவும், தாளம் போடுவதும், கை தட்டுவதும், சலங்கை ஒலி எடுப்பதும் ஆகிய பல வண்ண ஜாலங்களை செய்து நடனம் செய்து அவையிலிருந்தவர்-களின் பாராட்டுதலை அள்ளிக் கொண்டார்.
இவருக்கு உறு-துணையாக குரு ஜெயந்தி சுப்ரமணியத்தின் நடன அமைப்பு, ஜதிகள் மிக அற்புதமாக இருந்தது. நெல்லை கண்ணன் மிரு-தங்கம் வெகுஅற்புதமாக நடனமணிக்கு தகுந்தவாறு  ஜதிகளுக்கு மிக நேர்த்தியாக வாசித்து யாவரையும் மகிழச் செய்தார். நந்தினி சர்மா ஆனந்த் தன்னுடைய இனிமையான குரலில் வெகுஜோராக பாடி மகிழ்வித்தார். வயலின் கலையரசன் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அற்புதமாக வாசித்தார்.

- ராகப்ரியன்

No comments:

Post a Comment