About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Saturday, September 8, 2012

சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்

சென்னையின் பாரம்பரிய அடையாளங்கள் ஒன்றாகத் திகழும் சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் சேவையில் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டதல்ல. அது 262 வருட பரிணாம மாற்றங்களுக்குப் பிறகே உயர்நீதிமன்றமாக உருவெடுத்தது. 1600ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தொடர்பான சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றமாக ஆங்கில அரசால் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப் பட்டது. அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் 1640ல் சவுல்ட்ரி கோர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதே சிவில், கிரிமனல் வகைக் குற்றங்களை விசாரிக்கத் தொடங்கியது. 

மேலும் சில மாற்றங்களுடன் சவுல்ட்ரி கோர்ட், 1688ல் மேயர் கோர்ட் ஆக மாற்றப்பட்டு சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1798ல் இது மெட்ராஸ் கோர்ட் ஆஃப் ரெக்கார்டர் என்று மாற்றப்பட்டு, அதன் முதல் ரெக்கார்டராக தாமஸ் ஸ்டிரேன்ஜ் நியமிக்கப்பட்டார். விரைவில் 1801ல் அது மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் ஆக மாறியது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில்தான் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு 1862ஆம் ஆண்டுவரை மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. 

1862ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஐகோர்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறுதான் சென்னை உயர்நீதி மன்றம் உருவாகியது. 1888ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் 1892ல் நிறைவுற்றது. தற்போதுள்ள கட்ட வளாகத்தில் 1892 முதல் உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. 2004ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

சென்னை உயர்நீதிமன்றம் தனது நெடிய வரலாறில் பல முக்கியமான வழக்குகளையும் விசித்திரமான வழக்குகளையும் சந்தித்துள்ளது. அபாரமான வாதத்திறமை கொண்ட பல வழக்கறிஞர்களையும், நீதியின் செங்கோல் வழுவாமல் தீர்ப்பளிக்கும் ஞானம் கொண்ட பல நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. நாட்டையே கதிகலங்க வைத்த, பரபரப்பூட்டிய பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

நமது நீதிமன்றங்கள் தொடக்கத்தில் சிவில், கிரிமினல் வழக்குகளை மட்டுமே கவனித்து வந்தாலும், சுதந்தரத்துக்குப் பிறகு, நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அதைக் காக்கும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு வந்துவிட்டது. நாட்டின் முதல் இரண்டு அடிப்படைத் தூண்களான அரசும் நிர்வாகமும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுவரும் இக்காலத்தில், அவற்றைக் கண்டிக்கும் பொறுப்பையும், முறையாகச் செயல்பட வைக்கும் பொறுப்பையும் நீதிமன்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் ஆபத்து நேராமல் காப்பதில் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகக் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. அதை நமது நீதிமன்றங்கள் செம்மையாகவே செய்துவருகின்றன. கிரிமினல் வழக்குகளில் மட்டுமல்லாமல் சமூக நல வழக்குகளில் பல அற்புதமான தீர்ப்புகளை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் பெருமைச் சேர்த்துள்ளது. 

நீதிமன்றங்கள் தமது அதிகார வரம்புக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு மக்கள் 
சேவையாற்றினாலும், போதுமான நிர்வாக வசதிகள், கட்டமைப்புகள் இல்லாதது, போதுமான நீதிபதிகள் இல்லாதது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளாதது எனப் பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்கள்.  

- மான்வேல்ஸ்

No comments:

Post a Comment