About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Saturday, January 14, 2012

போகியும் பொங்கலும்

விழாக்களுக்குப் பேர்போனது தமிழகம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்பது போல வருடம் முழுவதுமே ஏதாவதொரு விழா வந்து சென்றுகொண்டுதான் இருக்கும். நம் உள்ளங்களில் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் பொங்கலும் இவ்வித விழாக்களில் ஒன்று.




பொங்கல், உழவர் சிறப்பினை எடுத்துரைக்கும் விழா. ’உழவர் விழா’ என்றும் இவ்விழாவினை அழைப்பர். பிறர் வாழ்வில் வளம் பொங்கப் பாடுபடும் உழவர்கள், மற்றவர்களுக்கும் உதவிகளை வாரி வழங்கும் விழாவே பொங்கல்.
தைத் திங்கள் முதல்நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டாலும், அடுத்துவரும் இரு-நாட்களுமே தொடர்ந்து சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் செய்நன்றி மறவாதவர்கள். உழவு சிறக்க உறுதுணையாக விளங்கும் இந்திரனுக்கும், மறைமுகமாக ’போகி’ என்ற பெயரிலே தைத் திங்களுக்கு முதல் நாளன்று கொண்டாடுகிறார்கள். வடநாட்டினர் இப்போகித் திருநாளன்று இந்திரனை நினைந்து வழிபடுபவர். எனவே, உழவர்தம் வந்தனைக்கு இந்திர வணக்கம் உரியதுதான்.
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
என்கிறது உலகப் பொதுமறை. புறத் தூய்மைக்கு ஆதாரமாக விளங்கும் நீரேஅகத் தூய்மைக்கும் வழி வகுக்கிறது எனலாம். நீர் நம் புற அழுக்கைப் போக்குவது போல், மழை மனவேதனையைப் போக்குகிறது. வீட்டிலுள்ள, நாட்டிலுள்ள அக அழுக்குகளைக் களைவதே போகியாகக் கொண்டாடப் படுகிறது.

உழவுக்கு உற்ற தோழனாய் விளங்குபவன் கதிரவன். அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடும் விழாவே பொங்கல். ஆடியில் விதைவிதைத்து, கார்த்திகையில் ’கார்’ நெல்லுக்குப் பிறகு பெறும் பயன், மார்கழியில் மகிழ்வூட்ட வரும். அவ்வாறு முதன்முதலாக வரும் அரிசியைக் கொண்டு, பொங்கலன்று கதிரவனுக்குப் பொங்கலிட்டு மகிழ்வர். அன்று விடியலில் எழுந்து குளித்து, வீட்டினைத் தூய்மை செய்து மணலாலும், செங்கற் பொடியாலும் புதுமுறைக் கோலங்கள் அமைத்து, புத்தாடைகள் உடுத்தி, புத்தடுப்பு மூட்டி, புதுப்பானையில் பாலும் அரிசியும் இட்டுப் பொங்கலிடுவதுடன், உடன் பயிரிட்ட காய்கறிகளையும் உணவாக்கி அனைத்துக்கும் மூலகாரணனான சூரியன்முன் படைத்து பின் தாமும் உண்பர்.
உழவுக்கு வந்தனையாக விளங்குவதில் இந்திரனும் சூரியனும் மட்டுமா விளங்கு-கின்றனர்? செல்வம் என்ற பொருளுக்கு சிறப்பு சேர்க்கும் மாடும், அந்தச் செல்வத்தை உரு-வாக்கிய சக மனிதர்களும் அல்லவா இதில் பங்கு வகிக்கின்றனர்.

’மாடு’ என்ற சொல்லுக்கே ’செல்வம்’ என்ற பொருளுண்டு. உழவின் ஓர் அங்கமாக விளங்கும் மாடு, ஒருவரது கடின உழைப்பைக் குறிப்பிடும்போது, ’மாடு போல’ உழைக்கிறான் எனக் குறிப்பிடுவார்கள். உழைப்புக்க 
அஞ்சாத மாட்டுக்கு மரியாதை செலுத்துமுக-மாக, அவற்றை நன்கு குளிப்பாட்டி மாலை-யிட்டு, மணி கட்டி பொட்டிட்டு, பூ அலங்காரம் செய்வித்துப் பொங்கலும் படைத்துப் போற்றி, வீதியுலா வரும் காட்சியே ’மாட்டுப் பொங்கல்’.

ஏறு தழுவுதல்’ எனப்படும் ’மஞ்சுவிரட்டு’ விழாவும் இந்த மாட்டுப் பொங்கல் அன்று சில கிராமங்களில் நடைபெறுகிறது. 

’ஏறு தழுவுதல்’ நமக்கு மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. ’மாடு’ என்றால் செல்வம் எனக் கண்டோம். செல்வத்தைப் போற்றி, அதனைக் கட்டி அடக்கியாளத் தெரியாதவனை, ’செல்வத் திருமகளும்’ கை-விட்டுச் சென்றுவிடுவாள் என்பதையே ’மஞ்சு-விரட்டு’ மறைமுகமாக வழிமொழிகிறது. 
கடைசியாக, ’காணும் பொங்கல்’. காணும் பொங்கல் என்றால் பல்வேறு இடங்-களுக்குச் சென்று கண்டுவருதல் என்பது இப்போதைய வழக்காக உள்ளது. தான் பெற்ற சந்தோஷத்தை மற்றவர்களும் பெற்றுள்ளனரா என அறியும்வகையாக வீட்டைவிட்டு வெளிவந்து வெளி உலகத்தா-ரிடம் ’உங்கள் வீட்டில் பால் பொங்கிற்றா?’ எனக் கேட்பதுடன், உற்றார் உறவினர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதவி செய்யும் முகமாகக் கொண்டாடும் விழாவே ’காணும் பொங்கல்’. இந்நாளில், தம்முடன் ஒத்துழைத்த பணி-யாளர்களுக்குப் புத்தாடைகளும் அணிகலன்களும் கொடுத்து மகிழ்வதுடன், சாதி சமய வேறுபாடின்றி வறியவர்களுக்கும் உதவி மகிழ்வர். மேலும், உற்றார் உறவினர்-களை வீட்டுக்கு வரவழைத்து, உணவளித்து சிறப்பும் செய்து வழியனுப்புவதுடன், மணமான புது மணமக்களுக்கு நல்லதொரு விருந்தும் தந்து ஆடை அணிகலன்களையும் நல்குவர்.

மகர சங்கராந்தி நாளான தைப் பொங்கல் நாளன்று, சென்னை அடையாறு மத்திய கைலாஸ் எனப்படும் நடுக் கயிலாய கோயிலில், பூட்டிய குதிரைகளுடன் அருள்-பாலித்து வரும் அந்த ஆதவனைச் சென்று வழிபடுங்கள். ஆதவனை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு பார்வைக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லை. கண் நன்றாகத் தெரியும். எனவே, அந்நாளில் அருகில் இருக்கும் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

தை திருநாளன்று பொங்கல் பொங்குவது போல, வாசகர்கள் அனைவரது வீட்டிலும் செல்வமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். 

வாழ்வ வளமுடன்...
- சைதை முரளி

No comments:

Post a Comment