About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, December 29, 2011

வரலக்ஷ்மி


இசை விழாக் கச்சேரிகள் காலையில் எழுந்து காபி குடிக்கும் நேரத்திலேயே தொடங்கி விடுகின்றன. முப்பது வருடங் களுக்கும் மேலாக டிசம்பர் சீசனில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் ஸ்ரீ கபாலி பைன் ஆர்ட்ஸ், இளம் கலைஞர் களை எப்போதும் இரு கரம் நீட்டி ஆதரிக்கிறது.

இந்த சபாவில் முதல் கச்சேரி காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கிறது.அது நமக்கும் சவுகர்யமான நேரம் என்பதால் 20-12-11 செவ்வாயன்று சாஸ்திரி ஹாலுக்குள் நுழைந்தோம்.வரலஷ்மி ஆனந்தகுமார் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தார்.ஹம்ஸத்வனியில் வந்தேஹம் என்று தொடங்கும் க்ருதி. சுறு சுறுப்பான ஆரம்பம்.

தொடர்ந்து, குர்ஜரி ராகத்தில் அமைந்த குருஜன புத குரு போதயே என்ற தீட்சிதர் க்ருதி. தீட்சிதர் பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் அமைத்திருக்கிறார். தவிர க்ருதியில் ராகத்தின் பெயரும் தகுந்த விதத்தில் இடம்பெறச் செய்வார். இந்த பாடலை ராக பாவத்துடன் னேர்த்தியாகக் கையாண்டார் வரலஷ்மி.
அதன்பின் பாடிய ‘பஜரே ரேமானஸ’ (ஆபேரி), மரியாத காதய்யா , கனக-செயல் (புன்னாக வராளி) நினைப்ப தெப்போது ஐயன் பதத்தை (நாத நாமக்ரியா) ஆகிய அனைத்துமே பாடலின் பாவத்தையும் ராகத்தின் பொலிவையும் எடுத்துக் காட்டியது. நல்ல கற்பனை. ஷண்முக ப்ரியா ராக ஆலாபனை சுவையான கற்பனை வளத்துடன் அமைந்திருந்தது.ஆண்டவனே உனை நம்பினேன் என்ற பாடலில் இசையின் அழகும், ஸ்வரப்ரஸ்தாரங்களில் ஆழமும் வெளிப்பட்டது.

சங்கராபரண ராகத்தை கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரித்து அழகான மாளிகை யாக நிர்மாணித்தார், சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமனின் பாசறை யில் உருவான இந்த பாடகி. ஸ்வரராக சுதா க்ருதியை எடுத்துக் கொண்டு பாடலை யும் நிரவல் ஸ்வரத்தையும் ரசிக்கும் படி அளித்தார். பூர்ணா சிவாவின் வயலின் நல்ல ஒத்துழைப்பு.
- சந்திரிகா ராஜாராம்

No comments:

Post a Comment