About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, December 21, 2011

ஒருநாள் போதுமா...

வசந்த காலத்தில் பறவைகள் பல்வேறு திசைகளிலிருந்து வந்து வேடந்தாங்கலை சரண் அடையும் என்று அறிந்திருக்கிறோம். அதுபோல்,இசைப் பறவைகள் இந்தியா முழுவதிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து சென்னையை சூழ்கின்றன ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் ! இசை ரசிகர்கள் ,இளைய மற்றும் சீனியர் கலைஞர்களின் கருத்துக்களை அறிய எண்ணி கடந்த 75 ஆண்டுகளாக கலை சேவை புரிந்து வரும் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியை ஒருநாள் முழுவதும் முற்றுகையிட முடிவு செய்தோம். அதன்படி, சென்ற வாரம் 16-12-2011, வெள்ளியன்று காலை முதல் இரவு வரையிலான நிகழ்ச்சிகளை பார்த்தபோது ஒரு விஷயம் தெளிவாகியது.

இசையை ஆர்வத்துடன் பயின்று திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் நோக்கி காத்திருக்கும் இளங்கலைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை மனதில் கொண்டு இளங்கலைஞர்களுக்கு வாய்ப்பு தரும் அதேநேரத்தில், ரசிகர்கள் ஆவலுடன் கேட்கக் காத்திருக்கும் சீனியர்களுக்கும் சமமாக இடம் கொடுத்து பாராட்டத்தக்க சேவை புரிகிறது மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா என்று புரிந்தது.


பகல் 12 மணிக்கு விக்னேஷ் ஈஸ்வரின் கச்சேரி. இவர் மும்பையி-லிருந்து மைக்ரேட் ஆகி-விட்ட இளம் பறவை. மும்பையில் பி.ஈ. எலக்ட்ரானிக்ஸ் முடித்து சென்னை ஐஐடி-யில் எம்.எஸ் படிக்கிறார். பாலக்காடு டி.எஸ். அனந்தராம பாகவதரிடம் இசையை ஓரளவு நன்றாகவே பயின்றுவிட்ட இவர் சென்னை வந்தது படிப்பிற்கு மட்டும் அல்ல.இசையை மேலும் மெருகேற்றவும்தான். தற்போது டி.எம்.கிருஷ்ணாவிடம் கற்று வருகிறார். அவருடைய முயற்சி வீண்போகவில்லை என்று கச்சேரி கேட்டதும் தோன்றியது.அருமையான பேகட ராக ஆலாபனை. பளிச் சென்று இருந்தது. ’சங்கரி நீவே ‘ க்ருதியில் நல்ல விறுவிறுப்பு. ஸ்வரமும் கச்சிதம். அடுத்து வராளியில் ‘கருணை யேலா கண்டே ராமா’ வில் நல்ல பாவம். கரகரப்ரியா ராக ஆலபனையும் ‘பகல நில பாடி ‘ பாட்டும் கேட்க சுகமாக இருந்தது.

இறுதியாக, கோவர்த்தனகிரிதாரி என்ற பாடலும், நிறைமதி முகம் என்ற திருப்புகழும் பாடி நிறைவு செய்தார். லாவண்யாவின் வயலின் நல்ல ஒத்துழைப்பு . நல்ல சுநாதம் !
விக்னேஷிற்கு வெண்ணை போன்ற குரல் வளம்.கூப்பிட்ட இடத்திற்கு வரு கிறது. வேகமான ப்ருகாவை பாடினாலும் உறுத்தாமல் வழுக்கிகொண்டு போகும் குரல் இவருக்கு வரப்ரசாதம். நன்றாக உழைத்தால் சிகரங்களைத் தொடலாம்.

அடுத்த கச்சேரியாக பைரவி, மாளவி சகோதரிகள்.இவர்கள் சங்கீத உலகில் ஓரளவு தடம் பதித்து விட்டவர்கள். சென்ற வருடம் இசைவிழாவிலேயே ரசிகர்களாலும் இசைவல்லுனர்-களாலும் பாரட்டப்பட்டவர்-கள். அன்றைய நிகழ்ச்சியிலும் தமது திறமையை சிறப் பாகவே வெளிப் படுத்தினர்.

நான்கு மணியளவில் விஜயலட்சுமி சுப்ரமண்யத்தின் பாட்டு. முன்னணி இசைக் கலைஞர்கள் வரிசை-யில் வைத்து கருதப்படுபவர் இவர். நல்ல பாடாந்தரம்; கேட்பவரைக் கவரும் அலட்டிக் கொள்ளாத அனாயாசமான பாணி! ஆழ்ந்த ஞானமும் பட்டு கத்தரித்தாற் போன்ற சங்கதிகளும் ஸ்வர ப்ரஸ்தாரங்களும் இவருடைய தனிச் சிறப்பு. நர்மதா வயலின் , சுந்தரேசன் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா என்ற அன்றைய கூட்டணி அமர்க்களமாக இருந்தது.

மாலை ஆறரை மணிக்கு ப்ரியா சகோதரிகள் கச்சேரி.பிரபலமான பாடகிகள்.அன்று நிகழ்ச்சியில் தமது ஆற்றலை மீண்டும் நிரூபித்தனர். நவராகமாலிகை வர்ணம் ’வலச்சி’யுடன் கச்சேரி அமர்க்களமாக தொடங்கியது. ஸ்ரீ வாதாபி கணபதியே (ஸாஹானா), நாககாந்தாரி ராகனுதே (நாககாந்தாரி), லாவண்ய ரமா(பூர்ண ஸட்ஜம்), பிறவா வரம் தாரும்(லதாங்கி), என நீண்ட பட்டியல்.ஒவ்வொன்றும் அருமை. நீ நாம ருசி தெலியுரா என்ற கரகரப்ரியா ராகக்ருதியும்,தொடர்ந்து பாடிய சுத்த தன்யாசி ராகம் தானம் பல்லவியும்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்!
த தத்திமி தத்திமி ததிமி யனி சதா என்று சிவபெருமானைக் குறிக்கும் பல்லவி. ராகமாலிகை பாடும்போது ஆடேனம்ம ( பரஸ்), ஆனந்த நடமாடுவார் (பூர்வி கல்யாணி). இடது பதம்தூக்கி (கமாஸ்), ஸர்வேச்வரா கருணாமூர்த்தே (ரேவதி) ஆகிய சிவபெருமான் பற்றிய பாடல்களிலிருந்து சில வார்த்தைகளைப் பாடி ஸ்வரமும் பாடியது புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.நல்ல கற்பனை!
நிகழ்ச்சியின் இறுதியாக, ஹிந்தோள ராகத்தில் ஸ்ரீ ரங்க சிசுவு ஜோஜோ பாடல் ரசிகர்களை தாலாட் டியது.துன்பம் நேர்கையில் மற்றும் ஆகீர் பைரவியில் ‘ கோவிந்த தாமோதர மாதவ’ என்ற பாடலுடன் நிறைவு செய்தனர் சகோதரி கள்.நல்ல பாவமும் ஒரே குரலில் இணைந்து பாடு வதும் புதுமைகள் முயல்வதும் பாராட்டப்பட வேண்டியவை. இறுதிவரை அமர்ந்து ரசித்த அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது இந்த கச்சேரி.

தொடர்ந்து அருமையாக கச்சேரி களைக் கேட்டபோது, பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘ஒருநாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா’ என்ற எண்ணம் தோன்றியது.

இப்படியொரு இனிமையான இசை கேட்க வழி வகுத்த மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் பொறுப்பாளர் களுக்கு நன்றி சொல்லத்தோன்றியது.இசையுடன் இந்த நாள் இனிய நாளாக கழிந்தது.
- சந்திரிகா ராஜாராம்

No comments:

Post a Comment