சைவ சமயக் குறவர்களாலும் ஆழ்வார்களாலும் போற்றிப் பாடப்பட்ட கோயில்கள் மிகச் சிறப்புடையவை. தேவாரப் பாடல்களைப் பெற்ற ஆலயங்களை ஸ்தலங்கள் என்றும், திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பெற்ற கோயில்களை திவ்ய தேசங்கள் என்றும் சிறப்பித்துக் கூறுவர். ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களை ‘மங்களா சாசனம்’ செய்யப்பெற்ற கோயில்கள் என்றும் கூறுவர்.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களின் விவரத்தை,
‘ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் சீர்நடுநாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாகக் கொள்’
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் சீர்நடுநாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாகக் கொள்’
எனும் பாடலால் அறியலாம். எனினும், இதனை விரிவாகப் பார்த்தோமானால்
சென்னையில் ஒன்றும், செங்கற்பட்டில் இருபதும், வட ஆற்காட்டில் ஒன்றும், தென்னாற்காட்டில் மூன்றும், தஞ்சையில் முப்பத்து மூன்றும், திருச்சியில் ஆறும், மதுரையில் மூன்றும், திருநெல்வேலியில் பத்தும், ராமநாதபுரத்தில் ஐந்தும், ஆந்திராவில் இரண்டும், வடநாட்டில் பத்தும், கொச்சியில் பதின்மூன்றும், விண்ணுலகில் ஒன்றுமாக 108 திவ்ய தேசங்கள்.
ஸர்வலோக நாதனா கிய ஸ்ரீமந் நாராயணன், சேதனர்களாகிய ஆன்மாக்களுக்கு தேஹம், இந்திரியம், மனது, புத்தி முதலியவைகளை அளித்ததுடன், அவர்கள் தம்மை வந்தடைந்து நற்பேறு அடைய வேண்டும் என்ற கருணையால் தாம் ஏற்றுக்கொண்ட ரூபங்களில் நித்யர்களும் முத்தர்களுமே சேவித்து மகிழக்கூடியது பரரூபம். இது பரமபதத்திலே உள்ளது.
அடுத்தது திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட வ்யூஹரூபம். இப்படிப் பரமபுருஷன் பல அவதாரங்களை மேற்கொண்டாலும் எல்லா உயிர்களையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு அந்தர்யாமியாகவும் உள்ளான். இவ்விதம் அந்தர்யாமியாகவும் இருக்கும் திருவரங்க நாயகன், வ்யூஹரூபமாய் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் தலையாயதாக, முதன்மையாகத் திகழ்கிறது. ஈரிருபதாஞ் சோழத்தில் ஸ்ரீரங்கம் முக்கியமானது. வைணவ உலகில் கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கம்தான்.
கோயில் (கோயில்திருவரங்கம்), திருமலை (திருமலைதிருப்பதி), பெருமாள் கோயில் (பெருமாள் கோயில்காஞ்சிபுரம்) என வைணவர் களால் பிரதானமாக எடுத்துக் கூறப்படு கின்ற மூன்றிலும் மற்றும் பல்வேறு அம்சங்களிலும் ‘பெரியது’ திருவரங்கம்தான்!
வைணவர்கள் ஸ்ரீரங்கம் உட்பட பல திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்தாலும், ‘ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம நுதிநம் ஸம்வர்த்தய’ என்று ஸேவிப்பதிலிருந்தே ஸ்ரீரங்கத்தின் பெருமையை உணரலாம். மேலும், ஸ்ரீரங்கநாதரை ஸேவித்தாலே மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்த பலன்.
பிரணவாகரமான ஸ்ரீரங்க விமானத் திலே, ஆதிசேஷ சயனத்தில் பள்ளிகொண்டு அருள்கிறார் திருவரங்கநாதர். ஆதியில்
சத்தியலோகத்தில் பிரம்மதேவரால் ஆராதிக்கப்பட்டு வந்த இவ்வரங்கநாதரை, பின்பு சூரியகுலத்து மனுவின் குமாரனான இட்சுவாகு பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் இருந்து அவரருளால் திருஅயோத்திக்குக் கொண்டுவந்து பிரதிஷ்டித்து, ஆராதனை செய்து வந்தான்.
இந்த அரங்கநாதரை இட்சுவாகுவுக்குத் தருவதற்கு முன்னர் ஸ்ரீரங்கநாதர் தன்னைவிட்டுப் போய்விடுவாரே என்ற கலக்கத்திலிருந்த பிரம்மதேவருக்கு திருவரங்க நாயகன் அவரது கலக்கத்தை நீக்கி, ‘நீ என்னைத் தினந்தோறும் உதயகாலத்துக்கு முன்புள்ள உஷத்காலத்தில் வந்து வழிபடலாம்’ எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
இட்சுவாகுவும், அதன்பிறகு அவனது வம்சா வழியினரும் திருவரங்கநாதரை வழிபட்டு வந்தனர். பின்னர் இதே சூரிய வம்சத்தினரான தசரதர் வெகுநாட்கள் வரை பிள்ளையில்லாமல் வருந்தினார். இவ்விதம் வருந்திய காலத்தில் வசிஷ்டர் முதலான தபோதனர்களைக் கலந்தாலோசித்து அஸ்வமேத யாகம் நடத்தினார். அந்த வேள்வியில் கலந்துகொள்ள பல அரசர்களுக்கு அழைப்பு சென்றதில், சோழ மன்னனான தர்மவர்மாவும் கலந்துகொண்டார்.
வேள்வியைக் காணச்சென்ற தர்மவர்மா ஸ்ரீரங்கநாதரையும் ஸ்ரீரங்க விமானத்தையும் கண்டு வணங்கி வழிபட்டதோடு நில்லாமல், திருவரங்கநாதரும் அவருடைய விமானமும் தன் நாட்டிலே தங்கித் தரிசனம் அளித்துவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணி, தம் இருப்பிடம் வந்துசேர்ந்து சந்திர புஷ்கரணிக் குளக்கரையில் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துத் தவமிருக்கத் தொடங்கினார்.
தர்மவர்மாவின் தவத்தின் பலனாலேயே எம்பெருமான் ராமராக அவதரித்த விபீஷணனுக்கு தன் குலதெய்வமாகிய ஸ்ரீரங்கநாதரை வனவாசம் முடித்து ராவணனை அழித்து பட்டாபிஷேகம் செய்துகொண்டபின் ஆராதித்து வருமாறு தந்த னுப்பினார். என்றாலும் பெருமாளின் நோக்கம் என்னவோ தர்மவர்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டதால், விபீஷணன் இலங்கை நோக்கிச் செல்லும்போது இடைவழியில் உபய காவேரி மத்தியிலே புடைபெயராது விமானத்துடனே நிலை நின்றருளினார். இவ்வாறு திருமால் மனமுவந்து நிலை நின்றதனாலேயே ‘நர்மரங்கம்’ என்று வழங்கி வந்த இவ்வூர் பின்னர் ஸ்ரீரங்கமாயிற்று.
ராமபிரானாலேயே வணங்கப்பட்டதால் அரங்கநாதருக்கு ‘பெரிய பெருமாள்’ எனும் ஒரு திருநாமமும் உண்டு. திருமகளார் திருநிருத்தஞ் செய்யும் இடமாய் ஸ்ரீரங்கம் இருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய மேன்மைக்குக் கூத்துப் பயிலும் இடமாய் இருத்தலாலும், மேலும் திருமாலே இங்கு மனமுவந்து எழுந்தருளியதாலும் ‘திருவரங்கம்’ என்னும் பெயர் வந்தது என ‘திருவரங்கக் கலம்பகம்’ கூறுகிறது.
அரங்கனுக்கு வழங்கும் திருநாமங்கள்: ஸ்ரீரங்கநாதர், பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன், எம்பெருமான் ஸ்ரீரங்கன். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை யும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் மணக்கோலத்தில் ஏற்றதால் ‘அழகிய மணவாளன்’ என்ற திருநாமம்.
நாச்சியார்: ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார், பெரிய பிராட்டி.
கோலம்: ஆதிசேஷ சயனம், பள்ளிகொண்ட திருக்கோலம்.
விமானம்: பிரணவாகார விமானம், வேதசிருங்க சிகரம்.
நதி: காவேரியும் கொள்ளிடமும்.
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. இதனைச் சுற்றி வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பொரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம் மற்றும் மாதீர்த்தம் ஆகிய நவதீர்த்தங்கள்.
தல விருட்சம்: புன்னை மரம்.
பிரத்யட்சம்: தர்மவர்மா, ரவி தர்மன், சந்திரன், காவேரி முதலானவர்களுக்குப் பிரத்யட்சம்.
மங்களா சாசனம்: ஆழ்வார்கள் பன்னிருவரில் மதுரகவி ஆழ்வார் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் இப்பெருமாளுக்கு 247 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்வித்திருக்கிறார்கள். இச்சிறப்பு வேறு எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லை.
மதுரகவி ஆழ்வார் பதினொரு பாசுரங்களே பாடியுள்ளார். தன் பாசுரங்க ளால் பெருமாளைப் பாடாமல், தன் ஆசார்யரான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாகக் கருதி, ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ எனும் பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளதிலிருந்தே இவரிடம் பகவத் பக்தியைக் காட்டிலும் ஆசார்ய பக்தியே சிறப்புற்றிருந்த நிலை புலப்படுகிறது.
‘நீலமேக நெடும் பொற்குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழுதலையுடை யருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்...
என்கண் காட்டென் றென்றுளங் கவற்ற வந்தேன்’
என்று சிலப்பதிகாரத்தில் திருவரங்கத்தைப் பற்றிப் பாராட்டிக் கூறப்பட்டிருக்கிறது.
156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘பூலோக வைகுந்தம்’ என்றழைக்கப்படும் இத்தலத்தில் ராஜகோபுரம் 236 அடி உயரம் உடையது. ஸப்த பிராகாரங்களும், எண்ணிறந்த மண்டபங்களும் உடையது. இத்திருக்கோயிலின் கருடாழ்வார் உயரமானவர், மிகப் பெரியவர்.
கார்த்திகை மாதத்தில் திருவரங்க நாயகனுக்கு பர்வோத்ஸவம் வருகிறது. பஞ்சபர்வ உத்ஸவங்களிலே அரங்கருக்குத் திருமஞ்சனம் நடைபெறுவதும் முக்கிய அம்சம். சக்கரத்தாழ்வார் சந்நிதியில் அழகிய மணவாளனாகிய ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி யிருப்பார். இச்சமயம் சொக்கப்பனை ஏற்றுவர். இக்காட்சியைக் கண்டுகளித்த பிறகு, எம்பெருமான் சந்தன மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார்.
சந்தன மண்டபத்தில் எம்பெருமானார் எழுந்தருளிய பின்பு, திருமங்கையாழ்வாரின் ‘வாடினேன்’ பாசுரத்தை அரையர்கள் மூலம் பாடியருளுவார்கள். பின்பு பெருமாள் நம்மாழ்வாருக்கு மார்கழியில் வரும் திருநாளுக்காக ஸ்ரீமுகப்பட்டயம் எழுதி அருள்வார்.
மேலும் இம்மாதத்தில் கைசிக ஏகாதசி புறப்பாடும், சந்தன மண்டபத்தில் திரு மஞ்சனமும் கண்டருளும் நம்பெருமாள், அன்று அர்ச்சுன மண்டபத்தில் ஆஸ்தானம் கொண்டு கைசிகப் புராணத்தையும், திருக்குறுங்குடி குறித்த பாசுரங்களையும் மற்றும் வியாக்கியானங்களையும் கேட்டருள்வார்.
சூரிய உதயத்துக்கு முன்பாகவே எம்பெருமானின் புறப்பாடு நடைபெறும். ஸ்ரீரங்கநாதர் மேற்புறமுள்ள யாளிப் படிக்கட்டுக்கு எழுந்தருளும் விழாவினை ‘படியேற்றம்’ என்றழைப்பர். இவ்விதம் பெருமாள் படியேற்றம் புரியும்பொழுது பச்சைக் கற்பூரங்களை அழகிய மணவாளரான அரங்கனின்மீது தூவுவார்கள். இந்தப் படியேற்ற அழகுக் காட்சியைக் காண விஜயரங்க நாயக்கர் தம்முடைய குடும்பத்துடன் வந்து காணமுடியாமல் போனதால், மறு ஆண்டிலாவது இதனைக் காணவேண்டும் என்று திருவரங்கத்திலேயே தங்கிவிட்டதாகக் கூறுவதும் உண்டு. எனவே, இம்மாதத்தில் இவை யாவும் நாம் காணவேண்டிய விசேஷங்கள்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் மார்கழி மாதம் ‘திருவத்யயனோத்ஸவம்’ விமரிசையாக நடைபெறும். அரங்கனின் சந்நிதியிலும் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
‘திருமொழித் திருநாள்’ என்றழைக்கப்பெறும் பகற்பத்து உத்ஸவம், ஏகாதசிக்கு முன் பத்து நாட்களுக்கு நடைபெறும். பகற்பத்து உத்ஸவங்களில் முதல் ஒன்பது நாட்களிலும் பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, தம்மெதிரே இருவரிசையிலும் எழுந்தருளப் பண்ணியிருக்கும் ஆழ்வார்களுக்கு தீர்த்தம் பிரசாதம் சாதித்து ஆழ்வார்களுக்கு மரியாதை செய்தனுப்பியபின் உள்ளே எழுந்தருள்வார்.
பகற்பத்து காலங்களில் பெருமாள் எதிரே அரையர்கள் திருப்பல்லாண்டைத் தொடங்கி, பின்னர் பெரிய திருமொழிப் பாசுரங்களைப் பாடி வியாக்கியானம்
சாதித்து அபிநயம் பிடிப்பர். இந்த உத்ஸவத்தின் பத்தாம் நாளன்று பெருமாளுக்கு ‘நாச்சியார் திருக்கோலம்’ நடைபெறுகிறது. ‘மோகனாவதாரம்’ என்றழைக்கப்பெறும் இத்திருக்கோலத்தை அனைவரும்
சேவிக்கவேண்டியது மிகமிக அவசியம். ஆழ்வார்களுக்கு அன்று ‘கைலிவஸ்திரங்கள்’ அனுக்கிரகிக்கப் படுகின்றன.
இராப்பத்து உத்ஸவம் வைகுண்ட ஏகாதசியன்றுதான் தொடங்குகிறது. ‘திருவாய்மொழித் திருநாள்’ எனப்படும் இந்த இராப்பத்து உத்ஸவத்தில், ஆரம்ப நாளான வைகுண்ட ஏகாதசியன்று ‘பரமபத வாசல்’ திறக்கப்படுகிறது. அன்று பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். அச்சமயம் ‘ரத்ன அங்கி’ உத்ஸவப் பெருமாளுக்குச்
சாற்றப்படுகிறது. பெரிய பெருமாளுக்கோ ‘முத்து அங்கி’ சாற்றப்படும்.
மார்கழி மாத சுக்ல
பட்சத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று, வடக்கு வாசல் வழியே சென்று பரமபதத்தில் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள், எத்தனை பாவம் செய்தவர்களாக இருப்பினும் மோட்சத்தை அடைவார்கள்.
இராப்பத்து உத்ஸவத்தில் ஏழாம் திருநாளன்று பகற்பத்தில் பத்தாம் திருநாள் ‘நாச்சியார் திருக்கோலம்’ பெருமாளுக்கு நடைபெற்றதைப் போன்று நம்மாழ்வாருக் கும் ‘நாச்சியார் திருக்கோலம்’ நடைபெறுகிறது. இச்சமயம் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் எழுந்தருளச்செய்து சேவை சாதிப்பர்.
இராப்பத்தின் பத்தாம் நாளன்று நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. அன்று பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரை எழுந்தருளச்செய்து அவருக்கு துளசி தளத்தைச் சமர்ப்பிப்பார்கள். அன்று திருவாய்மொழிச் சாற்றுமுறை நடைபெறும். எல்லா ஆழ்வார்களுக்கும் அன்றைய தினத்தில் ‘கைலி வஸ்திரம்’ சாற்றப்படும்.
வைணவர்களுக்கு ‘அர்ச்சை’ எனப்படும் உருவ வழிபாட்டில் நாட்டம் அதிகம். பரமபதம், பாற்கடல், அவதாரம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐந்து நிலைகளுள் அர்ச்சையே பூரணமானதென்பதும், இதில் செய்யும் பிரபத்தியே (பக்தி) விரைவில் பலனளிக்கக்கூடியதென்பதும் வைணவர்கள் கொண்டிருக்கும் உறுதி.
பகவானின் ஆறு குணங்களிலே
ஸௌசீல்யம், ஸௌலப்யம் என்பன சிறப்பான குணங்கள். மற்ற குணங்களான வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஞானம் மற்றும் சக்தி என்கிற குணங்களும் சிறப்பானவைதான். எனினும் ஸௌசீல்ய குணத்திலே உயர்ந்தவனாகிய இறைவன், தாழ்ந்தவர்களாகிய நம்மோடு இரண்டறக் கலக்கிறான். இவ்வுலகம், பரமபதம் எனப்படும் அவ்வுலகம் இவற்றுக்குச் சுவாமியாய், பெரிய பிராட்டியாரை பிரதான மஹிஷியாய்க் கொண்டவனாய் இருக்கும் எம்பெருமான், தன்னோடு கலக்கும் ஜீவான்மாவின்
சிறுமையையும் தன் பெருமையையும் நோக்காது இரண்டறக் கலக்கிறான். மேலும் பக்தன் தன்னை உணராதிருப்பினும், பகவானே வந்து பக்தனோடு கலந்து உறவாடுகிறான்.
ஸௌலப்ய குணத்திலோ கண்ணுக்குப் புலப்படாதிருக்கும் இறைவன், தன் திவ்விய மங்கள விக்கிரகத்தை சேதனனாகிய பக்தன் தன் கண்களாலே கண்டு பற்றுதற்கேற்ப எளியவனாக இருக்கிறான். இறைவன் தான் இருக்கும் பரமபதத்தை விட்டு நமக்குப் பரமபதனாகிய அவன் ‘திருவடி’யைச்
சேவிக்கும் வண்ணம் உலக மக்களிடையே வந்து அவதரித்துத் தன்னை எளியனாக்குகிறான். பகவானின் இந்த ஆறு குணங்களில் ஞான மற்றும் சக்திகள் இரண்டைத் தவிர, மற்ற நான்கு குணங்களும் பக்தன் பரந்தாமனைப் பற்றுதற்கு உதவி செய்பவை.
கோதை நாச்சியாராகிய ஆண்டாளோ, அரங்கநாதனுடைய அனுபவத்தைக் காட்டிலும் பரமபத அனுபவம் சிறந்ததன்று என நினைப்பவர்களாயும், ‘பரமபதம் வந்தால் என் செய்வோம்’ என அரற்றுபவர்களாயும் வாழும் திருவரங்கப் பெருமக்களை எண்ணி வியப்பதை, ‘நல்லார்கள் வாழும் நளிரரங்கம்’ என்னும் அடியின் மூலம் தெரிவிக்கிறார். திருவரங்கநாதனாகிய எம்பெருமான் திருப்பாணாழ்வாரையும் ஆண்டாளையும் அவரவருடைய உடலோடு ஏற்று அங்கீகரித்துக்கொண்டதை அறியாதவர் எவருளர்?! இஃது அர்ச்சையில் நிகழ்ந்த பேரதிசயச் செயல்தான் அல்லவா!
எந்தவொரு விஷயமாயினும் சரி, அவ்விஷயத்தின்மீது நமக்கு ஒரு ப்ரேமை இருந்தால்தான், காதல் இருந்தால்தான் அவ்விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நம்மால் முற்றும் உணர முடியும்.
துவாபர யுகத்தில் தன் ப்ரேமையால் ஒரு ராதை கண்ணனை ஆட்கொண்டாள். கலியுகத்திலோ அந்த ப்ரேமை கலந்த பக்தியால், தெய்வீகத் தன்மையையே எண்ணியிருந்த கோதையின் காதலால் ஈர்க்கப்பட்டார் திருவரங்கநாதர். கோதை தன் அன்பால் அரங்கனை ஆட்கொண்டதால் ‘ஆண்டாள்’ ஆயினார்.
டில்லி பாதுஷாவின் திருமகளான துலுக்க நாச்சியார் என்றழைக்கப்பெறும்
சுல்தானி தாயாரும், தர்மவர்ம சோழனின் திருமகளான உறையூர் நாச்சியார் என்றழைக்கப்பெறும் சோழ குலவல்லித் தாயாரும், குலசேகர மன்னனின் திரு மகளான சேர குலவல்லியும் அரங்கனிடம் ஆரா ப்ரேமை கொண்டு அரங்கனிடம் ஐக்கியமாயினர்.
இந்தக் காதல் மாயை நிரம்பியவர் களுக்கோ சிற்றின்பமாகவும், அது விலகி யவர்களுக்கோ பேரின்பமாகவும் உள்ளது. ஆண்டாள் போன்றோர்களின் காதலோ எல்லாவற்றையும் கடந்த தெய்வீக இன்பம்!
ஆண் பெண் பேதங்கள் மனிதர்களிடம் தான்! இறைவனிடத்தில் இந்த பேதங்கள் இல்லை. அவன் எல்லா உயிர்களிலும் நீக்க மற நிறைந்துள்ளான். அவன் வேண்டுவ தெல்லாம் பக்தர்களின் உண்மையான அன்பு ஒன்றினையே! பக்தி செய்தால் பரம சுகத்தை அளிக்கிறான். பக்தி செய்யாதிருந்தாலும் பக்தர்களை அவன் வெறுப்பதில்லை. தன் மறக்கருணையால் அவர்களை நல்நிலைக்கு உயர்த்துகிறான்.
இதனையே திருவரங்கக் கலம்பகத்தில் பிள்ளைப் பெருமாளையங்கார் அவர்கள், ‘தேடுகின்றணையைம் பொறிகளுக்கிரை தேடியுங் கிடையாமல்
வாடுகின்றனை வீடு சென்றென்றினி மருவுவைமடநெஞ்சே
யாடுகின்றில் யழுகிலை தொழுகிலை யரங்கனைக் கரங்கூப்பிப்
பாடுகின்றிலை நினைகிலை பதின்மர் தம் பாடலின் படியாயே’
என்று, பக்தி செய்யாதவர்களும் அரங்கனிடம் பக்தி செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார். மேலும் அவர்,
‘திருவரங்கர் திருக்கோயில் சேர்ந்துமது திருக்கோயி
றருவரென்றும் வைகுந்தர் தயங்கொளிசேர் வைகுந்த
மொருமருங்கி னந்துடையா ரொழிந்தார்சன னந்துடையார்
மருவமறா திருப்பீரே வணங்கமறந் திருப்பீரே’
என, திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்து உங்களின் இந்த மாறுபாட்டை, எம்பெருமானைத் தியானிக்காது ஐம்பொறி களின் வசப்பட்டு பக்தி செய்யாது மாறும், தடுமாறும் மனத்தின் பாட்டை ஒழிப்பீர்க ளானால், எம்பெருமான் உங்களுக்கு வீடு பேற்றை அளிப்பான் என்று எடுத்துரைக் கிறார்.
தொண்டரடிப் பொடி என்றழைக்கப் பெறும் விப்ரநாராயணரோ,
‘பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சு தா! அமர றேறே! ஆயர்தம் கொழுந்தே எனும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!’
என, திருமாலையில் அரங்கனை நினைக்கும் சுவையொன்றே போதும் என திளைத்துப் போற்றுகிறார். இவர் இவ்வரங் கனைக் குறித்து திருமாலையும் (45 பாசுரங்கள்), திருப்பள்ளியெழுச்சியும் (10 பாசுரங்கள்) பாடியுள்ளார்.
அரங்கனையே நினைத்து அவனது நினைப்புச் சுவையிலேயே இன்பம் காணும் ஆழ்வார்களைப் போல, அரையர்களைப் போல, நாமும் இச்சுவையைப் பெற அரங்கனிடம் ப்ரேமை கொள்வோமாக!
விரைவில் அடுத்த திவ்ய தேசத்தைத் தரிப்போம்...
(தரிசிப்போம்...)
- சைதை முரளி
No comments:
Post a Comment